புதன், 25 பிப்ரவரி, 2015

குறும்படம் என்றால்?......

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.குறும்படம் என்றால் என்ன என்று பார்ப்போம்.


குறும்படம் என்றால் என்ன?
                முதலில் குறும்படம் என்றால் படக்கருவி மூலம் படம்பிடிக்கும் அனைத்தும் குறும்படம் ஆகமுடியாது. ஒரு முழுநீளப்படத்திற்க்கான இலக்கணங்கள் எல்லாமுமே குறும்படத்திற்கும் பொருந்தும். கதை, திரைக்கதை போன்ற படப்பிடிப்பிற்கு முன்னர் செய்யவேண்டிய முன்தயாரிப்பு வேலைகளும், படத்தொகுப்பு, இசையமைத்தல் போன்ற பிற்சேர்க்கை வேலைகளும் ஒரு குறும்படத்திற்கு தேவைதான். அவை இல்லாவிட்டால் படத்துணுக்குகளை ஒட்ட வைத்த ரசிகத்தன்மை சிஞ்சித்தும் இல்லாத கண்றாவி கோர்வையாக அமையும். வேண்டுமானால் சில இலக்கியவாதிகளை அழைத்து பின்னவினவத்துவ விருந்து என்று பொய் சமைக்கலாம். 40 நிமிடங்களுக்கு உட்பட்ட படங்களைதான் குறும்படம் என்று வகைப்படுத்துகிறது ஆஸ்கார் விருதுகளை வழங்கும் அக்காதமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம். இதையே குறும்படத்திற்கான கால அளவாக பெருவாரியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் பெரும்பான்மையான குறும்படங்கள் 10 நிமிடங்களுக்கு உட்பட்டே இருப்பதை காணலாம். இதற்கு படம் எடுக்க ஆகும் செலவே பெரும்பாலும் காரணம் என்று சொல்லலாம். ஆனாலும் 10 நிமிடத்திற்குட்பட்ட படங்களை இணையத்தில் எளிதில் வெளியிடமுடியும் என்பதும் ஒரு முக்கிய காரணம்.
முழுநீளப்படங்கள் போலவே குறும்படங்களிலும் பல்வேறு பாணிகள்(genre) உள்ளன. ஆனாலும் ஆவணப்படங்கள். அறிவுரைப்படங்கள், கதைப்படங்கள் என்று புரிதலுக்காய் எளிமைப்படுத்தி மூன்றாய் பிரித்துக்கொள்ளலாம். இன்று குறும்படம் எடுப்பவர்கள் முதலில் இதை தீர்மானத்துகொண்டு தன் படங்களை எடுக்கவே ஆரம்பிக்க வேண்டும். எந்த பாணியில், எந்த வகையில் படம் எடுத்தாலும் அதற்கான திரைக்கதை அமைப்பது மிக முக்கியமான பணியாகும். இன்று இணையத்தில் இரைந்துகிடக்கும் குறும்படங்களில், அதுவும் குறிப்பாக தமிழ் குறும்படங்களில் இல்லாத வஸ்து இந்த திரைக்கதைதான் (முழுநீளப்படங்களிலும் அது இல்லை என்பது வேறு சமாச்சாரம்). சொல்லவந்த செய்தியை வெகு குறுகிய கால அளவில் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்பதால் திரைக்கதை கட்டமைப்பு இறுக்கமாகவும் பார்வையாளரின் ஈடுபாட்டையும் கவனத்தையும் கவர்வதாக அமைக்கப்படவேண்டும். ஆவணப்படங்கள் / அறிவுரைப்படங்கள் எடுப்பவர்கள் தங்கள் குறும்படத்திற்கு திரைக்கதை தேவையில்லை நடப்பதை அப்படியே எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். அனுபவமிக்கவர்களே சறுக்கி விழும் இடம் இதுதான்.
கருத்துப்படங்களானாலும் ஆவணப்படங்களானாலும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாவிட்டால் பார்வையாளர்கள் ஈடுபாட்டுடன் ரசிக்க இயலாது. இவ்வகைப்படங்களில் பொதுவாக கீழ்கண்ட பகுதிகளாய் இருப்பதை பார்க்கலாம்
1. ஒரு சமூக ப்ரச்சனை
2. அந்த ப்ரச்சனையின் தீவிரம் / பாதிப்பு
3. அதற்க்கான தீர்வுகள்
சாதாரண புகைபிடித்தலில் உள்ள தீமைகளை விளக்கும் 2 நிமிடப்படமானாலும் சரி மைக்கேல் மூரின் சிக்கோ போன்ற படமானாலும் இப்படியாப்பட்ட ஒரு எளிய கட்டமைப்பை கொண்டதாகவே இருக்கும். இதில் ப்ரச்சனைகளின் தீவிரத்தை காட்சிப்படுத்தும்போது, பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் உணர்ந்த அல்லது சந்தித்த ஒரு களத்தை வைத்து விளக்கினால் பார்வையாளனால் நன்றாக ஒன்ற முடியும்.
வெற்றி பெற்ற கதை குறும்படங்களிலும் கீழுள்ள ஒரு கட்டமைப்பை காணலாம்
1. முக்கிய பாத்திர அறிமுகம்
2. பாத்திரம் சந்திக்கும் பிரச்சனைகள்
3. பிரச்சனைகளுக்கான தீர்வை பாத்திரம் கண்டுபிடிப்பது/அடைவது
பெரும்பான்மையான முழுநீளப்படங்களுக்கு இந்த கட்டமைப்பு பொருந்தி வருவதை பார்க்கலாம். ஆனால் முழுநீளப்படங்களில் இன்னும் அதிகமான துணைக்கதைகள் இருக்கவேண்டும். பாத்திரத்தை சுற்றி நடப்பவை, உப/துணை  பாத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்று இணைப்பது சுவாரஸ்யத்தை கூட்டும். ஆனால் குறும்படத்தின் நீளம் காரணமாக அவ்வகையான பகட்டுகள் எல்லாம் குறும்படத்திற்கு ஒத்து வராது. ஒரு குறும்படத்தை ஒரு சிறுகதைக்கான கட்டுமானத்தோடு ஒப்பிடலாம். ஒரு சிறுகதை எப்படி உச்சகட்டத்திற்கு மிக அருகில் ஆரம்பிக்கப்படவேண்டுமோ, அதைப்போலவே ஒரு குறும்படமும் உட்டகட்ட காட்சிக்கு மிக அருகாமையில் துவங்கப்படவேண்டும். அதைப்போலவே வருடக்கணக்கில் நடக்கும் கதைகள் குறும்பட அமைப்பிற்கு ஒத்து வராது. ஒரு சிறிய நிகழ்வோ அல்லது அந்த நிகழ்வு நிகழ்வதற்கான களனை சார்ந்தோ திரைக்கதை அமைப்பது சுவாரஸ்யத்தைக்கூட்டும்.
குறும்படம் எடுக்க என்ன தேவை?
கையில் படப்பிடிப்பு கருவி கிடைத்ததும் நானும் குறும்படம் எடுக்கிறேன் என்று கிளம்பிவிடுதால்தான் இயல்பாக நடக்கக்கூடியது. ஆனால் நல்ல குறும்படங்கள் முன்பே கூறியதுபோல முன் தயாரிப்பு, படப்பிடிப்பு, பிற்சேர்க்கை என்ற மூன்று நிலைகளில் ஒரு முழுநீளப்படத்திற்குரிய எல்லா படலங்களையும் வரிசைச்சிரமாக செயல்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு படலத்திலும் நடைபெற வேண்டிய முக்கிய செயல்களை கிழே உள்ளன:
முன் தயாரிப்பு:
                கதை தயாரித்தல்
                திரைக்கதை அமைத்தல்
                ஸ்டோரி போர்ட் அல்லது கதைப்பலகை - முழுகதையையும் ஓவியங்கள் மூலம் விளக்குவது
                காட்சி கோணங்களின் பட்டியல்
                பட்ஜெட் தயாரிப்பு
                நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேர்ந்தெடுப்பு
                படப்பிடிப்பிற்கு தேவையான அனுமதி ஆவணங்கள்
               
படப்பிடிப்பு:
                உணவு பரிமாற்றம்
                பட சேமிற்பிற்கான வந்தகடு/குறுந்தகடுகளை தயாராக வைத்திருத்தல்
                லைட்டிங் / ஒளிஅமைப்பு
                படப்பிடிப்பில் நடிகர்கள் / டெக்னிசியன்களின் பாதுகாப்பு

பிற்சேர்க்கை:
                படத்தொகுப்பு / ஒளி அமைப்பு (கலர் கரெக்‌ஷன்)
                இசை / ஒலி அமைப்பு
                வெளியீடு
ஒர் சாதாரண குறும்படத்திற்கு இத்தனை விரிவான செயல்திட்டம் எல்லாம அவசியமா என்ற கேள்வி எழலாம். ஒரு நல்ல குறும்படத்திற்கான குறைந்தபட்ச செயல்திட்டமே இது. இதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதில்லை. உங்கள் நேரத்திற்கேற்றவாறு கண்டிப்பாக மாற்றி அமைக்கலாம். ஆனால் ஒரு திட்டத்துடன் குறும்படத்தை எடுக்க ஆரம்பித்தால் பின்னர் வரும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
குறும்பட டிப்ஸ் / இடறுகுழிகள்:
10 நிமிடப்படம்தானே ரெண்டு மணி நேரத்தில் எடுத்து முடித்துவிடலாம் என்று முதன்முதலில் படமெடுக்க கிளம்புபவர்கள் அது எத்தனை தவறான கருத்து என்பதை முதல் 30 நிமிடத்திலேயே உணர்ந்துவிடுவார்கள். ஒரு படம் எடுப்பது ஒரு தனிநபர் காரியமல்ல, ஒரு குழுவினராய் செயலாற்றி நிறைவேற்ற வேண்டிய கூட்டுப்பணி. அதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் குழுவினர் முழுவதுமே பாதிப்புக்குள்ளாவார்கள்.  அதனால்தான் ஒரு சரியான செயல்திட்டம் வகுப்பது மிக முக்கியமாகிறது. எனக்கு தெரிந்த டிப்ஸ் மற்றும் இடர்களை முடிந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன்.
1. திரைக்கதையை முடிந்தவரை அதற்குரிய வடிவத்திலேயே எழுதப்பழகுங்கள். அதையே மற்றவர்களுடன் கருத்து பரிமாற்றத்திற்கும் பயன்படுத்துங்கள். செல்டெக்ஸ் போன்ற இலவச மென்பொருட்களை பயன்படுத்துவது செலவை குறைப்பதுடன் திட்டமிடுதலுக்கும் பல நல்ல செயலிகளை கொண்டுள்ளது. ஒரு பக்க கதை படத்தில் ஒரு நிமிட நேரத்திற்கு ஒடும். ஒரு பக்கத்தை காட்சிப்படுத்த ஒன்னரை - இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். அதனால் செல்டெக்ஸில் ஐந்து பக்க திரைக்கதை, முடிவில் 5 நிமிடம் ஓடும் படமாக வரும். அதை படம்பிடித்து முடிக்க எட்டு முதல் பத்து மணிநேரம் வரை பிடிக்கும்.
2. ஒரு கதாபாத்திரத்தின் வசனம் 10-12 வார்த்தைக்கு மிகாமல் பார்த்து கொள்ளுங்கள். படக்குழுவினரும், நடிகர்களும் பெரும்பாலும் தொழில்முறை கலைஞர்களாக இல்லாதபட்சத்தில், ஆறு - எட்டு வார்த்தைக்கு மேற்ப்பட்ட வசனங்களை இயல்பாக ஏற்ற இறக்கத்துடன் நீங்கள் நினைக்கும் வகையில் பேச வைப்பது மிகவும் கடினம். அதனால் வசனங்களின் அளவை குறைப்பது நல்லது. மேலும் பெரிய வசனங்கள் காட்சிகளை நீளமடையவைத்து பார்வையாலர்களை சலிப்பைடைய வைக்கும்.
3. காட்சிக்கோணங்களையும், காட்சி வரிசையையும் முன்தயாரிப்பிலேயே முடிவு செய்து கொள்ளுங்கள். படப்பிடிப்பு சம்யத்தில் லைட்டிங், கேமராவின் குறைபாடுகள் போன்றவற்றால் சில காட்சிகளின் அமைப்பு கோணங்களை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாவிட்டாலும், முன்னரே தீர்மானிப்பது படப்பிடிப்பு நேர அலைச்சல்களையும் கருத்து மோதல்களையும் தவிர்க்கலாம்.
4. படப்பிடிப்பில் நேரும் டெக்னிக்கல் விசயங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணமே வரக்கூடாது. குறிப்பாக நிறங்கள், லைட்டிங் போன்ற சமாச்சாரங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திவிடலாம் என்ற நினைப்பிற்கு இடம் தரக்கூடாது. பிற்சேர்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை படப்பிடிப்பிற்கு முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும்.
5. நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுத்தாலும் அவர்களுடைய நேரம், பங்களிப்பு ஆகிவற்றை பற்றி முன்பே வரையறுத்து கூறிவிடுங்கள். யாராருக்கு எந்த துறை, எந்தவிதமான பங்களிப்பு, மற்றவர்களுடன் இருக்கும் சார்புநிலை ஆகிவற்றை முன்பே விலக்கிவிடுதல் நலம். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் 15-30 நிமிடங்கள் இதை தெளிவுபடுத்திவிடுவது நல்ல வாடிக்கை. நண்பர்களின் பங்களிப்பிற்கு தக்க அங்கீகரிப்பை செலுத்தவும் மறக்ககூடாது.
6. படக்கோணங்களை ஒளிப்பதிவாளரிடம் முன்னரே பேசி தெளிவுபடுத்திவிடுங்கள். ஒளி அமைப்பிற்கும் படக்கருவியை வைக்க தகுந்த இடம் போன்றவற்றை அவர் தயார் செய்ய அது உதவும். 
7. குறும்படங்களில் பங்கேற்பவர்களுக்கு பணம் கொடுக்க நம் பட்ஜெட் ஒத்து வராவிட்டாலும், கலைஞர்களுக்கு குறைந்தபட்ச உணவவையாவது வழங்குவதற்க்கான பட்ஜெட் செய்வது பண்பு.
8. ஒரு காட்சி/கோணத்தைப்பற்றி சந்தேகம் இருந்தால், படப்பிடிப்பிற்கு முன்பே டெஸ்ட் சூட் செய்துவிடுவது நல்லது. படப்பிடிப்பில் டெஸ்ட் செய்துகொண்டிருந்தால் குழுவினருக்கு டைரக்டர் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும்.
9. முடிந்தால் கலைஞர்களின் திறமையை கண்டறிய ஆடிசன் வைப்பது நல்லது. அப்படி ஆடிசன் நடக்கும் போது கையில் உள்ள சிறிய கேமராவாகினும் அதை படம்பிடித்து கொள்ளுங்கள். பின்னர் சரியான கலைஞர்களை தேர்ந்தெடுக்க உகர்ந்ததாக இருக்கும்.
10. ரிகர்சல் / ஒத்திகை பார்ப்பது மிகவும் அவசியம். முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே ஒத்திகை நடப்பது சிறப்பு. பெரும்பான்மையான கலைஞர்கள் இதை பொழுதுபோக்காக செய்ய வருவதால் ஒத்திகை அவர்களுடைய பங்களிப்பை மேன்மைபடுத்த உதவும். ஒத்திகையையும் படம்பிடித்தால் தவறுகளை திருத்த உதவும்.
முக்கியமான கட்டளையாக -
டைரக்டர்தான் கேப்டன் என்பதை தீவிரமாக செயல்படுத்துங்கள். சினிமா / படப்பிடிப்பு என்பது நம் மக்கள் அதீத விருப்பு கொண்டுள்ள ஒரு விசயம். படப்பிடிப்பை பார்வையிட வந்த நண்பருக்கு கூட காட்சி அமைப்பில் சில கருத்துகள் இருக்கலாம், டெண்டுலகருக்கே கிரிகெட் கற்றுத்தரும் துடிப்புடன் களத்தில் குதிக்க தயாராக நண்பர்கள் சுற்றிலும் இருக்கலாம். நடிகர்களின் நடிப்பை பற்றிய மாற்றங்களை சொல்ல நினைக்கலாம். ஆனால் அதை டைரக்டரிடமோ அவரது உதவியாளரிடமோ தெரிவிக்கலாமோ அன்றி, படக்குழுவினரையும், நடிகர்களையும் வெளி நபர்களோ மற்ற படக்குழுவினடிடத்திலோ நேரடியாக கருத்து / மாற்றங்களை சொல்ல அனுமதித்தல் கூடாது. டைரக்டர் மட்டுமே மொத்த குழுவினரையும் வழிநடத்தவேண்டும். நீங்கள் டைரக்டராக இல்லாத பட்சத்தில் இதையே கடைப்பிடித்து டைரக்டரின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள்.
குறும்படத்திற்கு இத்தனை திட்டங்களா என்று தளர்ந்துவிடாதீர்கள், முன்பே சொன்னது போல இந்த திட்டங்களை எல்லாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதில்லை. முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ஒரு முறை சென்று பார்வையாளராக சென்றி கவனித்துவிட்டு வாருங்கள்.
இனி என்ன, குறும்படம் எடுக்க கேமராவை கையில எடுத்துட்டீங்களா? அதான் தப்பு... அப்ப கட்டுரையை இன்னொருக்கா முதல்ல இருந்து படிங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக