திங்கள், 3 செப்டம்பர், 2018

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க-10

அன்புடையீர்,
 வணக்கம். இந்தப்பதிவில் ராஜா தனது பலப்படுத்த castling என்னும் கோட்டை கட்டுவது பற்றி அறிவோம்.திறப்புகள் முடிந்தவுடனேயே ராஜாவுக்கு கோட்டை கட்டிக்கொள்வது நன்று.ராஜா பக்கமும் கோட்டை கட்டலாம்,ராணியின் பக்கமும் கோட்டை கட்டலாம். கோட்டை கட்டும்போது ராஜா மற்றும்  ரூக் இடையில்  காலி கட்டங்களாக இருக்க வேண்டும்.முதலில் ராஜாவை இரண்டு கட்டங்கள் நகர்த்திவிட்டு பின்னர் ரூக்கை ராஜாவைத் தாண்டி அடுத்த கட்டத்தில் அமருமாறு வைக்க வேண்டும்.கீழே உள்ள படத்தை கவனமாகப் பாருங்க.ராஜாவின் பக்கம்(Ke to g , Rh to f) கோட்டைகட்டுவதையும்,அல்லது ராணியின் பக்கம்(Ke to c , Ra to d) கோட்டை கட்டுவதையும் அறிந்துகொள்ளுங்க.


சில காரணங்களால் கோட்டை கட்ட இயலாது.அதை அடுத்த பதிவில் காண்போம்.
என அன்புடன்,
சி.பரமேஸ்வரன்,
 அரசுப்பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க-09

அன்புடையீர்,
  வணக்கம். இந்த பதிவில் பான்களின் போக்கு பற்றி அறிந்துகொள்வோம்.
  பான்கள் என்னும் சிப்பாய்களைத்தாங்க காலாட்படை என்கிறோம்.மற்ற காய்களுக்கும் பான்களுக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் உள்ளது.மற்ற காய்களைப்போல தன் வழியில் நிற்கும் காய்களை அடிக்காமல் தடைபட்டு நின்றுவிடும்.முன்னோக்கி மட்டுமே அதுவும் ஒரு கட்டம் மட்டுமே நேர்த்திசையில் நகரும்.பின்னோக்கி வர இயலாது.ஆரம்ப விளையாட்டில் மட்டும் விரும்பினால் இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகர்த்தலாம்.பான் செல்லும் பைல்களின் பக்கவாட்டிலுள்ள பைல்களில் உள்ள காய்களை மட்டுமே குறுக்குவாக்கில் மேல்நோக்கி பயணித்து அடிக்கும்.என் பாசன்ட் ரூல் என்னும் விதி பான்களுக்கு மட்டுமே பொருந்தும்.எதிரியின் காய் இல்லாத கட்டத்தில் இருப்பதாக கருதி அடித்து எடுக்கும். அதேபோல தன் பணியை முழுமையாக முடித்தால் பதவி உயர்வு பெற்று சக்தி பெற்ற காயாக விளங்கும்.

                                     மேலே உள்ள படம் பக்கவாட்டு கட்டத்தில் எதிரியின் காய் இருந்தால் அந்த காயை அடிக்கும் போக்கை காட்டுகிறது. பெருக்கல் குறியிட்ட இடத்தில் காய் இருந்தால் அடிக்கப்படும்.இல்லையென்றால் நேர்த்திசையில் ஒவ்வொரு கட்டமாக நகரும். நகரும் பான் மேலே கடைசி கட்டத்தை சென்றடைந்துவிட்டால் ராணியாக அல்லது நாம் விரும்பும் அதிக சக்தியுள்ள காயாக பதவி உயர்வு பெறும்.
------------------------------------------------------------------------------------------------------------------
                              கீழே உள்ள படங்கள் En Passant என்னும் பொருந்தாவிதிப்படி கட்டத்தை தாண்டிய பான் முன் கட்டத்திலேயே இருப்பதாக கருதி அடிபடுகிறது.

ஒன்று...........
 இரண்டு............................................
 மூன்று.................
அடுத்த பதிவில் செஸ் ஆட்டத்தின் விதிமுறைகள் பற்றி அறிந்துகொள்வோம்...
 என அன்புடன்,
சி.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க-08

 அன்புடையீர்,
 வணக்கம். இந்த பதிவில் ரூக் என்னும் கோட்டையை பற்றி அறிந்துகொள்வோம் .
  சதுரங்க விளையாட்டில் ராணிக்கு அடுத்த மதிப்பெண்களை உடையது இந்த ரூக்தாங்க.ஐந்து மதிப்பெண்கள் பெற்றது.
    மேலும் கீழும் நேர்திசையில் பயணிக்கும்.அல்லது இடது,வலது என நேர்திசையில்  பயணிக்கும்.

                        கீழே கோட்டையின் உருவமும்,அது நகரும் போக்கு பற்றிய படமும் உங்களுக்காக...


அடுத்த பதிவில் பான்கள் என்னும் சிப்பாய்கள் போக்கு பற்றி அறிந்துகொள்வோம்..
என அன்புடன்,
சி.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க -07

அன்புடையீர்,
 வணக்கம். இந்த பதிவில் குதிரையின் போக்கு பற்றி அறிந்துகொள்வோம்.
நைட் என்னும் குதிரையானது மற்ற காய்களுடன் சம்பந்தப்படாதது.மற்ற காய்களைப்போல இடையில் கிடைக்கும் காலி கட்டங்களில் அமராது.அதேநேரத்தில் இடையில் காய்கள் இருந்தால் அதை அடிக்காமல் தாண்டிச்செல்லும் தன்மையுடையது.ஒருமுறை நகர்வுக்கு மூன்று கட்டங்கள் நகரும்.அப்போது எல் வடிவத்தில் சென்று திரும்பும் தன்மைகொண்டது.
இந்த வினோதப்போக்கினால் ஆரம்பநிலை ஆட்டங்களில் அதிக சக்திபெற்ற காயாக  உள்ளது.இரண்டு குதிரைகளையும் அடுத்தடுத்த கட்டங்களில் வைத்தவாறு நகர்த்திச்சென்றால் எதிரியை திணறடித்து தோல்வி நிலையைக்கூட ஏற்படுத்தும்.கருப்புக்கட்டத்தில் நிற்கும் குதிரை நகரும்போது வெள்ளைக்கட்டத்தில் அமரும்.வெள்ளைக்கட்டத்தில் நிற்கும் குதிரை நகரும்போது கருப்புக்கட்டத்தில் அமரும் தன்மை கொண்டது.இரண்டு கட்டங்கள் பைலில் சென்றால் ஒரு கட்டம் ரேங்கில் திரும்பும்.ஒருகட்டம் பைலில் சென்றால் இரண்டு கட்டம் ரேங்கில் திரும்பும்.இரண்டு கட்டம் ரேங்கில் சென்றால் ஒரு கட்டம் பைலில் திரும்பும்.ஒரு கட்டம் ரேங்கில் சென்றால் இரண்டுகட்டம் பைலில் திரும்பும்.கழப்பமாக இருந்தால் படத்தைப்பாருங்க எளிதாக புரியும். குதிரையின் மதிப்பெண் மூன்று.



சதுரங்கப்போட்டிகளில் ஆர்வமுள்ள நண்பர்களே,உங்களுக்காக குதிரை நகரும் வினோதப்பயணம் பற்றிய வரைபடங்கள் கீழே பதிவிட்டுள்ளேன்.மிக எளிமையான நகர்த்தல்கள்தாங்க.பயப்படாமல் பொறுமையாக ஒழுங்குபடுத்தி பயிற்சி செய்து பழகுங்க!..










அடுத்த பதிவில் ரூக் பற்றி பதிவிடுகிறேன்.கொஞ்ச நாள் பொறுமை காத்து அருளுக.
 என அன்புடன்,சி.பரமேஸ்வரன்,
அரசு பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை..9585600733
 எனது மின்னஞ்சல் முகவரி
(1)paramesdriver@gmail.com
(2)emailtoparames@gmail.com

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க -06

அன்புடையீர்,
 வணக்கம்.இந்த பதிவில் சதுரங்கவிளையாட்டில் பிஷப் நகரும் போக்கு பற்றி அறிந்துகொள்வோம்.
    பிஷப் ஆனது போர்டில்  ராஜா ,ராணிக்கு அடுத்தார்போல் பக்கத்தில் அமர்ந்திருக்கும் .பிஷப் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் இரண்டுவீதம் இருக்கும்.இரண்டில் ஒன்று கருப்பு கட்டத்திலேயே நகரும் தன்மை உடையது.இன்னொன்று வெள்ளைக்கட்டத்திலேயே நகரும் தன்மை கொண்டது.மேல் வலது,மேல் இடது குறுக்குக்கட்டங்களிலும்,கீழ் வலது,கீழ் இடது குறுக்குக்கட்டங்களிலும் போர்டின் கடைசிக்கட்டம் வரை நேராக பயணித்து திரும்பி வரும் தன்மைகொண்டது.இதன் மதிப்பெண் முன்று.
  பிஷப் கட்டங்களில் நகரும்  போக்கு பற்றி இங்கு அறிந்துகொள்ளுங்க.

அடுத்த பதிவில்  நைட் என்னும் குதிரையின் தனித்தன்மை போக்கு பற்றி அறிந்துகொள்வோம்.
 என அன்புடன்,
சி.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க-05

அன்புடையீர்,
 வணக்கம்.இந்த பதிவில் ராணியின் போக்கு பற்றி அறிந்துகொள்வோம்..சதுரங்க காய்களிலேயே அதிக உயரமுடையது ராணிதாங்க.தான் அமர்ந்துள்ள கட்டத்திலிருந்து இடது,வலது,மேல்,கீழ்,பக்கவாட்டு குறுக்கு கட்டங்கள் எட்டு திசைகளிலும் நேராக கட்டத்தின் கடைசி வரைக்கும் பயணிக்கும்,அடுத்த ஆட்டத்தில் திரும்பி வரும் போக்கு உடையது.அதனால்தாங்க ராணி மிகவும் திறனுடைய காயாக விளங்குகிறது.
ராணியின் உருவமைப்பும்,தான் நகரும் கட்டங்கள் பற்றிய விபரமும்...ராணியின் மதிப்பு 9பாயிண்டுகள் ஆகும்.

அடுத்த பதிவில் பிஷப் நகரும் போக்கு பற்றி அறிவோம்.
என அன்புடன்,
சி.,பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுனர்,
தாளவாடிகிளை.

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க-04

அன்புடையீர்,
                             வணக்கம். சதுரங்க போர்டில் காய்களும்,சிப்பாய்களும் நகரும் போக்கு பற்றி இனி வரும் பதிவுகளில் அறிவோம்.முதலாவதாக ராஜாவின் போக்கு...................
 .
                  மதிப்பிட முடியாத முக்கியமான காய் ராஜாதாங்க.   ராஜா சதுரங்க ஆட்டத்தில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.ஆட்டத்தின் குறிக்கோள், ராஜாவை எங்கும் நகராதவாறு வளைத்துப்பிடிப்பதே (செக்)'ஆகும்.
.  தான் இருக்கும் கட்டத்திலிருந்து எட்டு திசைகளிலும் ஒவ்வொரு கட்டம் மட்டுமே நகரும் தன்மையுடையது.ஆதலால் ராஜா பலம் குறைந்துள்ள காயாகவும் இருக்கிறது.
               அடுத்த பதிவில் சதுரங்க கட்டங்களில் ராணி நகரும் போக்கு பற்றி அறிவோம்..
என அன்புடன்,
சி.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க-03

அன்புடையீர்,
 வணக்கம்.
 சதுரங்க விளையாட்டில் அறுபத்துநான்கு சம சதுர கட்டங்கள் கருப்பு,வெள்ளை என மாறி மாறி இருக்கும் என்பதை முன்னரே கண்டோம்.
 இருவர் விளையாடும் இந்த செஸ் விளையாட்டில் ஒவ்வொருவருக்கும் ராஜாKing  1, ராணி Queen1 ,பிஷப்Bishop-2, நைட் Knight -2, ரூக் Rook-2 பான்ஸ்pawns-8  என பதினாறு காய்கள் வீதம் கருப்பு,வெள்ளை என மொத்தம் 32 காய்கள் இருக்கும்.
இந்த காய்களை கீழ்கண்ட போர்டில் அடுக்கியவாறு முதலில்  வைக்க வேண்டும்.


செஸ் காய்களின் மதிப்புகள் விபரம்...
    ஒரு பான் என்பது ஒரு மதிப்பெண் என அறிந்துகொள்ளவும்.
அடுத்த பாடத்தில் ஒவ்வொரு காய்களும், பான்களும் நகரும் போக்கினை படிப்போம்...
என அன்புடன்,
சி.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுநர்,
தாளவாடி கிளை.

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க-02

அன்புடையீர்,
 வணக்கம். செஸ் போர்டு பற்றிய பாடம் -02


 சதுரங்க விளையாட்டில் செஸ்போர்டுதான் யுத்தகளமாக விளங்குகிறது.
செஸ்போர்டு சமசதுரவடிவில் அறுபத்திநான்கு சமசதுர கட்டங்களைக் கொண்டுள்ளது.அதாவது
 நிற்கும் வசத்திலுள்ள கட்டங்கள் எட்டும் பைல்கள் எனப்படும் . பைல் ஒவ்வொன்றுக்கும் இடமிருந்து வலதாக  a , b , c, d, e, f, g, h , என சிறியஆங்கில எழுத்துக்களைக்கொண்டு பெயரிடப்பட்டிருக்கும்.முதல் கட்டம் கருப்பு என்றும்,அடுத்த கட்டம் வெள்ளை என்றும் வர்ணம் பூசப்பட்டிருக்கும்.(படத்தில் காண்க)
படுக்கை வசத்திலுள்ள கட்டங்கள் எட்டும் ரேங்க் எனப்படும்.ஒவ்வொரு ரேங்க் உம் கீழிருந்து மேலாக 1, 2, 3, 4, 5, 6, 7, 8, என எண்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.முதல் கட்டம் கருப்பு அடுத்த கட்டம் வெள்ளை என மாறி,மாறி வர்ணம் பூசப்பட்டிருக்கும்.(படத்தில் காண்க)
ஆக  கீழ் பக்க இடது கடைசிக்கட்டம் கருப்பு வர்ணத்தில்  a1 அடையாளமிட்டு அதாவது பெயரிட்டுத் தொடங்கும். கீழ் கண்ட ஆட்டப்பலகையில் உள்ளவாறு ஒவ்வொரு கட்டத்திற்கும் பெயரிட்டு  அழைக்க வேண்டும்.

என அன்புடன் சி.பரமேஸ்வரன்,அரசுப்பேருந்து ஓட்டுநர்,தாளவாடி.

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க-01


 அன்புடையீர்,
             வணக்கம். இந்த வலைப்பக்கத்தில் செஸ் விளையாட்டு பற்றிய பாடங்கள்  இன்று முதல் பதிவிடப்படுகின்றன.அனைவரும் கற்று தேர்ந்து விளையாட வாங்க!....

                             CHESS என்னும் சதுரங்க விளையாட்டு....

                      பாடம்.-01 செஸ் போட்டியின் வரலாறு.

                                              வேட்டையாடி காட்டுவாசியாக சுற்றித்திரிந்த மனிதன்  சிந்திக்கத்தொடங்கினான்.கல்வியறிவு பெற்றான்.கணிதத்தை கற்று அறிவியல்முன்னேற்றம் அடைந்தான்.பண்புள்ள மனிதனாக வாழ்வதற்கான பல இலக்கியங்களை எழுதி தம் வருங்காலத்தோன்றல்களுக்கு புத்தகங்களாக பதிப்பித்து வைத்தான்.புத்தகங்களை வாசித்து வாசித்து அறம்,பொருள்,இன்பத்தை அடைந்தான்.எத்தனையோ கண்டுபிடிப்புகளால் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி,சமூகமாக ஒன்றுபட்டு பல வசதிகளை பெற்று வாழ்ந்து வருகிறான்.ஆனால், போரிடுவதை மட்டும் மனிதசமூகத்தினால் இன்றுவரை தவிர்க்க முடியவில்லை.
           கற்கால யுத்தம்,ராம-ராவண யுத்தம்,மகாபாரதப்போர், எனத்தொடங்கி இந்தியா-பாகிஸ்தான் போர்,இந்தியா-சீனா  யுத்தம்,உள்நாட்டுப்போர்,விடுதலைக்கான போர்,என ஆதிகாலம் முதல் இன்று வரை எவரும் போரிடுதலை கைவிடவில்லை.
 மன்னராட்சி,மக்களாட்சி,சர்வாதிகாரம்,கம்யூனிசம்,சோஷலிசம், என எவ்வகையான ஆட்சி நடைபெற்றாலும் அதற்கு அடித்தளமே போரிடும் படைபலம் ஆகும்.
படைபலத்தை வைத்துதான் ஒரு நாட்டின் வலிமை கணிக்கப்படுகிறது.. அவ்வாறான படைகளை (1)தேர்ப்படை , (2)யானைப்படை (3)குதிரைப்படை (4) காலாட்படை என்னும் சிப்பாய்கள் படை ஆகிய நான்கு பிரிவுகளை வைத்து சதுர்+அங்கங்களை வைத்துதான் அந்தக்காலங்களில் மன்னர்கள் தமது நாட்டின் வலிமையை உலகிற்கு அறிவித்து வந்தார்கள்.ஒவ்வொரு படைக்கும் இப்படித்தான் வழிவகுத்துச்சென்று போரிட வேண்டும் என்ற விதிகளையும் வகுத்து செயல்படுத்தினார்கள். ஓய்வு காலங்களில் போரிடும் யுத்தியை மறந்துவிடக்கூடாது என்ற சிந்தனையில் அந்த படைகளின் பெயர்களாலேயே நான்கு முக்கிய பிரிவுகளை வைத்து சதுரங்கம் என்ற விளையாட்டினை   ஆடியும் வந்தார்கள்.
சதுரங்க விளையாட்டு (CHESS) என்பது  யுத்தத்தின் மாதிரிதாங்க. அதாவது MODEL OF A WAR என்பர். இந்த விளையாட்டில் செஸ்போர்டு யுத்தகளமாகவும்,விளையாட வைக்கப்படும் காய்களும்,பான்களும் போரிடும் படைகளாகும்.அதாவது கருப்பு,வெள்ளை என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு இருபக்கமும் விளையாடுபவர் இருவர் அமர்ந்து விளையாடுவர்.
 போர்க்களத்தில் பங்கேற்கும் படைப்பிரிவுகளைப்போன்றே இந்த விளையாட்டிலும் காய்கள் வைக்கப்படுகின்றன.ஒவ்வொரு காய்களுக்கும் போர்ப்படையைப்போன்றே நகரும் வழிகள் வெவ்வேறாக உருவாக்கப்பட்டுள்ளன. ராஜா-1,ராணி-1, பிஷப்-2,நைட்-2,ரூக்-2 ,சிப்பாய் -8 என வெள்ளைக்கு 16 காய்களும்,கருப்பிற்கு 16 காய்களும் ஆகமொத்தம் 32காய்களைக் கொண்டு செஸ் விளையாட்டு விளையாடப்படுகிறது.
       தொடரும்.......

தாளவாடி செஸ் அகாடமி-2018





 அன்புடையீர்,
 வணக்கம். நம்ம தாளவாடியில் தாலுக்கா அளவிலான பள்ளிகளின் மாணவ,மாணவிகளிடையே செஸ்போட்டி20-08-2018 அன்று கேசிடி மெட்ரிக் பள்ளியில்  நடைபெற்றது.