ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

செஸ் சந்தேகம்-கேள்வி-பதில்




                    இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டில் ஒரு பக்கத்துக்கு
16 காய்கள் வீதம் 32 காய்கள் பயன்படுத்தபடுகின்றன இரண்டு
வெவ்வேறு நிறங்களில் காய்கள் இருக்கும். ( 8 x 8 ) கட்டங்களை
கொண்ட சதுரவடிவ அமைப்பில்தான் உள்ளது.புத்திசாலிதனமும்
தந்திரமும் தான் இந்த விளையாட்டின் வெற்றியை நமக்கு கொடுக்கும்.
தினமும் பயிற்சி செய்து என்னதான் கண்டுபிடித்தாலும் நமக்கு
பல சந்தேகங்கள் எழும் அப்படிபட்ட சந்தேகங்களை எளிதாக நீக்கி
உங்களுக்கு பதில் வழங்க ஒரு இணையதளம் காத்திருக்கிறது.
எந்த பணமும் கொடுக்க வேண்டாம் உங்கள் கேள்விகளை இந்த
இணையளத்தில் பதிந்தால் உடனடியாக பதில் கிடைக்கும்.
இணையதள முகவரி : http://www.chessproblems.com
சதுரங்க விளையாட்டை புதிதாக தொடங்குபவருக்கு எழும்
சந்தேகம் முதல் அனுபவசாலிக்கு எழும் சந்தேகம் வரை
அனைத்துக்கும் இங்கு விடை உண்டு. ஏற்கனவே சதுரங்கத்தில்
உலக சாம்பியன் தமிழகத்தில் உள்ளது நமக்கு பெருமை தான்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சதுரங்கம் பலகையும் ஆட்டக்காய்களும் வைக்கும் முறை

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். சதுரங்கம் விளையாடலாம் வாங்க வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
        சதுரங்கம் விளையாட்டு விதிகள் பற்றி காண்போம்.
சதுரங்கம் விளையாட்டுப்பலகை 8 X 8 என்ற அளவில் சமமான அறுபத்துநான்கு சதுரக்கட்டங்களைக் கொண்டு இருக்கும்.இந்தக் கட்டங்களில் செங்குத்து வரிசைகளை அடையாளம் காண இடமிருந்து வலமாக  ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு ஆங்கில எழுத்து வீதம் a,b,c,d,e,f,g,h என்ற ஆங்கில எழுத்துக்களால்  எட்டு செங்குத்து வரிசைகளையும் குறியீடு செய்யப்பட்டு இருக்கும்.இந்த கட்டங்களை File  என்று அழைக்கப்படும். அதேபோல கிடைமட்ட வரிசைகளை அடையாளம் காண ஒவ்வொரு கிடைமட்ட வரிசைக்கும் கீழிருந்து மேலாக 1,2,3,4,5,6,7,8 என்ற எண்களால் குறியீடு செய்யப்பட்டு இருக்கும்.இதை Rank  என்று அழைக்கப்படும்.ஆக அறுபத்துநான்கு கட்டங்களுக்கும் ஃபைல் & ரேங்க் குறியீடு அடையாளம் இருக்கும். 
 மேற்கண்ட படத்தில் a,b,c.....என்ற வரிசை ஒவ்வொன்றும் a (File) ஃபைல் , b(File) ஃபைல், c(File) ஃபைல் என்று h (File)ஃபைல்கள் உள்ளதை பார்க்கவும்.அதேபோல் கீழிருந்து மேல் வரிசையாக 1,2,3,....வரிசை ஒவ்வொன்றுக்கும் 1(Rank)ரேங்க்,2(Rank)ரேங்க், 3(Rank)ரேங்க் என 8ரேங்க் அதாவது வரிசைகளாக பெயர் சூட்டப்பட்டு இருக்கும்.


            ஆட்ட அணிகள் வெள்ளை அணி என்றும் கறுப்பு அணி என்றும் இரண்டு படைகளை கொண்டு இருக்கும்.ஒவ்வொரு அணியும் எட்டு ஆட்டக்காய்களை கொண்டு இருக்கும்.  ஒரு ராஜா(King),ஒரு ராணி(Queen),இரண்டு மந்திரிகள் (Bishops) (அல்லது தேர்),இரண்டு குதிரைகள்(Knights),இரண்டு யானைகள்(Rooks) (அல்லது கோட்டை), எட்டு வீரர்கள்(Pawns)(காலாட் படை வீரர்கள்)- என வெள்ளைநிற படை அணிக்கு வெள்ளை நிறத்தில்  பதினாறு ஆட்டக்காய்களும்,கறுப்புநிற படை அணிக்கு கறுப்பு நிறத்தில் பதினாறு ஆட்டக்காய்களும் ஆக இரு அணிகளுக்கும் 16X2 = 32 காய்கள் ஆட்டக்காய்கள் இருக்கும்.
                  வெள்ளை அணிதான் ஆட்டத்தை முதலில் துவக்கும்.கறுப்பு அணி ஆட்டத்தை இரண்டாவதாக துவக்கும்.   வெள்ளை அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள  இடம் a1 to h1 & a2 to h2  ஃபைல் &ரேங்க் அதாவது  கிடைமட்டத்திலுள்ள கீழ் முதல் இரண்டு வரிசைகள். .கறுப்பு அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள  இடம் a8 to h8 &a7 to h7  ஃபைல்& ரேங்க் அதாவது கிடைமட்டத்திலுள்ள மேல் இரண்டு வரிசைகள் ஆகும்.
 சதுரங்கப்பலகையை வைக்கும் முறை பற்றியும்,ஆட்டக்காய்களை சதுரங்கப் பலகையில் வைக்கும் முறைகள் பார்ப்போம்.
a1  ஃபைல் கட்டம் கறுப்பு வண்ணத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு கட்டமும் கறுப்பு,வெள்ளை என இரண்டு நிறங்களிலும் மாறி,மாறி கிடைமட்டத்திலும்,கீழிருந்து மேல்மட்டத்திலும் பூசப்பட்டிருக்குமாறு பலகையை வைத்துக்கொள்ள வேண்டும். a1 ஃபைல் என்னும் கறுப்புக் கட்டத்தை ,வெள்ளை அணிக்கு இடது முதல் பக்கமாக இருக்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். அப்போது கறுப்பு அணிக்கும் முதல் கட்டமாகவும் கறுப்பு நிறக் கட்டம் அமைந்து இருக்கும்.இரு அணிகளுக்கும் வலதுபுற கடைசிக்கட்டம் வெள்ளை நிறத்தில் அமையும்.படத்தில் கண்டுள்ளவாறு அனைத்து காய்களையும் துவக்கத்தின்போது வைக்க வேண்டும்.



R - Rook, K- King,B-Bishop,Q- Queen, P-Pawn என பெயரினை தெரிந்து கொள்க.

சதுரங்க விளையாட்டு மூளைப்பயிற்சிக்கான விளையாட்டு.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
            சதுரங்கம் கற்கலாம் வாங்க!,வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.மூளைப் பயிற்சிக்கான விளையாட்டுகளுள் முதன்மையான விளையாட்டு சதுரங்கம் விளையாட்டு.அறிவை கூர்மை படுத்தும் விளையாட்டு. மிக எளிமையான விளையாட்டு.உலகலளவில் அதிகமான மக்களால் விளையாடப்படுகிறது. சதுரங்கம் விளையாட்டு இந்தியாவில் தோன்றி அரேபியர்களால் உலகளவில் பரப்பப்பட்ட விளையாட்டு.பழங்காலத்தில் இந்திய அரசர்களிடம் - தேர்ப்படை,யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை என படைப்பிரிவுகள் இருந்தன.அதேபோல் சதுரங்கம் விளையாட்டிலும் நான்குவகை படை அணிகள் உள்ளன.
 சதுரங்க விளையாட்டில் இயற்கணிதக் குறியீட்டு முறையை (Algebraic Notation) அரேபியர்களே அறிமுகப்படுத்தினர்.கி.பி.ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆடப்பட்ட சதுரங்கம் விளையாட்டு, கி.பி.பதினைந்தாம்  நூற்றாண்டில் உலகம் முழுவதும் பரவியது.
கி.பி.1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உலக சதுரங்க கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.யுனெஸ்கோ பன்னாட்டு அமைப்பில் 1980ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தது. இந்நாள்வரை 189 தேசிய சங்கங்கள் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர்.
2000ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சதுரங்கம் விளையாட்டுப்போட்டியில் நம்ம தமிழர் திரு.விஸ்வநாதன் ஆனந்த்  உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.திரு.விஸ்வநாதன் ஆனந்த் அவர்களே சதுரங்கப்போட்டியில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டினர் என்ற பெருமையை பெற்றார்.
உலக சதுரங்க கூட்டமைப்பு World Chee Federation பிரெஞ்ச் மொழியில் Federation Internationale Des Echess பெடரேசன் இன்டர்நேசனலே டெஸ் எக்கேக்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பின் தலைமையகம்பிரான்ஸ் நாட்டில் பாரீஸ்நகரில் அமைந்துள்ளது.
(1) உலக சதுரங்க கூட்டமைப்பின்
   இணையதள முகவரி www.fide.com
(2)  இந்திய சதுரங்க கூட்டமைப்பின் 
     இணையதள முகவரி;   www.aicf.in
(3)  தமிழ்நாடு சதுரங்கக் கழகம் தொடர்பான
         செய்திகளை அறிய www.tanchess.com






சதுரங்கம் CHESS விளையாட்டு தமிழில் கற்கலாம் வாங்க!

மரியாதைக்குரிய நண்பர்களே,
                                    வணக்கம்.சதுரங்கம் கற்கலாம் வாங்க,வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். 
chess விளையாட்டு இந்தியாவில் 1500ஆண்டுகளுக்கு முன்னர்  உருவாக்கப்பட்டு மன்னர் குடும்பங்களால் அரண்மனைகளில் விளையாடப்பட்ட அறிவுசார்ந்த விளையாட்டாகும்.அன்றைய காலம் மன்னராட்சி நடைபெற்றுவந்தது மட்டுமின்றி பக்கத்து நாட்டின் மீது போர் தொடுத்து அந்த நாட்டின் ராஜாவை சிறைப்பிடித்து நாட்டையும் கைப்பற்றுவதே குறிக்கோளாக கொண்டிருந்தனர்.ஆதலால் பொழுதுபோக்கு நேரங்களிலும்  போர்ப் பயிற்சி பெறுவதையும்,போரிடுவது பற்றிய சிந்தனையுமே கொண்டிருந்தனர்.அதனால் தானும் தம் குடும்பமும்  செஸ்போர்டை யுத்தகளமாகவும், செஸ்காய்களை கருப்பு,வெள்ளை என இருநாட்டு படைகளாகவும் வைத்து போர்ப் பயிற்சி பெறுவதற்காக செஸ் விளையாடி வந்துள்ளனர். 
          

             CHESS GAME - சதுரங்க விளையாட்டு சிந்தனையைத் தூண்டும்,அறிவை வளர்க்கும், தனிமையை போக்கும்,தன்னம்பிக்கையை வளர்க்கும் நுட்பக்கலை சார்ந்த  சிறந்த விளையாட்டு.அத்துடன்  மன அழுத்தத்தை குறைக்கும், எவருக்கும் உடல்ரீதியாக பாதிப்பு இல்லாத ஒழுக்கம் நிறைந்த விளையாட்டு சதுரங்கம் விளையாட்டு.ஆதலால்  செஸ் என்னும் சதுரங்க விளையாட்டினை நம்மால் இயன்றளவு தெரிந்துகொண்டு இன்றைய இளைய தலைமுறைகளுக்கு சதுரங்க விளையாட்டில்ஆர்வத்தை தூண்டும் வண்ணம் தமிழில் பதிவிடுவதற்கென்றே (09ஆகஸ்டு 2014 சனிக்கிழமை) இன்று இந்த புதிய வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 
       இந்த வலைப்பக்கத்தில்,
          (1)சதுரங்கம் ஆட்டப்பலகையில் கட்டங்களின் எண்ணிக்கையும் அமைப்பும்,அவற்றின் வண்ணங்களும் அமைப்பும்,

  (2)ஆட்டக்காய்களின் எண்ணிக்கையும்,அவற்றின் மதிப்பும்,ஒவ்வொரு காய்களும் துவக்கத்தில் அமரும் இடங்களும்,

(3)ஆட்டக்காய்கள் நகரும் முறைகளும்,நகரும் தூரங்களும்,திசைகளும்.

(4)சதுரங்கம் ஆட்டத்தின் விதிமுறைகளும்,கோட்டை கட்டுதலும்,

(5)சதுரங்கம் ஆட்டங்களின் வகைகளும்,கால அளவுகளும்,

(6)படைவீரர்களின் உழைப்பும்,உழைப்பிற்கேற்ப மதிப்புயர்வும்,

(7)முற்றுகையிடுதலும்,கட்டிப்போடுதலும்,

(8) ஸ்கோர்சீட் அமைப்பும், நகர்த்துதலின் விவரத்தை வரிசைப்படி  எழுதும் முறைகளும், 

                என சதுரங்கம் ஆட்டத்தின் பலவித நுணுக்கங்களையும்,ஆட்டவிதிகளையும்,வெற்றி தோல்வி நிர்ணயிக்கும் முறைகளும் போன்ற அனைத்து விவரங்களையும் தமிழில் நாங்கள் தெரிந்து கொள்ளும் முறைகளை  அப்படியே இந்தப் பதிவில்  ஒவ்வொன்றாக  பதிவிடுகிறோம்.
(முழுமையாக பகிர ஒரு மாதம் ஆகும் என கணக்கிட்டு உள்ளோம்)           
                                 அதேபோல சதுரங்க ஆட்டம் நன்கு விளையாட தெரிந்தவர்களும் இங்கு பதிவிட்டு செஸ் விளையாட்டு பற்றி நம்ம தமிழ் மாணவ சமுதாயத்திற்கு வழிகாட்டலாம் வாங்க!
  என அன்பன்,
 உங்கள் டிரைவர் 
பரமேஸ்வரன்.C
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,ஈரோடுமாவட்டம்.